Monetize Your Website or Blog

Wednesday, 27 July 2016

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜுனியர்! - சினிமா பாணி சதி

க்கமருந்து பயன்படுத்தியதாகப் பிடிபட்டிருக்கும் மல்யுத்த வீரர் நார்சிங், தனது உணவில் ஜுனியர் வீரர் ஒருவர் ஸ்டீராயிடை கலந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நடத்தப்பட்ட சோதனையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த மல்யுத்த வீரர் நார்சிங், ஸ்டீராய்ட் என்ற தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 'தான் குற்றமற்றவன் , ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை...!' எனவும் நார்சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் நார்சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்த நிலையில் ,ஹரியானாவில் சோன்பேட் காவல் நிலையத்தில் நார்சிங் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ''சோன்கபட் சாய் மையத்தில் பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜுனியர் வீரர் ஒருவர் ஸ்டீராய்டை கலந்துள்ளதாகக் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள சத்ரசால் மையத்தில் மல்யுத்த பயிற்சி எடுத்து வரும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் ஜுனியர் வீரர் எனவும் நார்சிங் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

நார்சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள வீரரின் பெயரை போலீஸ் வெளியிடவில்லை. நார்சிங் குறிப்பிட்டுள்ள அந்த இளம் வீரர் ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றுள்ள, சுஷில்குமாரின் பயிற்சியாளரும் மாமனாருமான சத்பால் சிங்கிடம் டெல்லி சத்ரசால் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறாராம். இதே மையத்தில்தான் சுஷில் குமாரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  

அது மட்டுமல்ல, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்த மற்றொரு மல்யுத்த வீரரான சந்தீப் சிங்கும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருந்தார். இவரும் நார்சிங்கும் சோன்பட் சாய் மையத்தில் ஒரே அறையில் தங்கியிருப்பவர்கள். ஒரே அறையில் தங்கியிருந்த இரு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றும், ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருப்பது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. 

இது குறித்து சத்பால் சிங் கூறுகையில், ''இந்த விவகாரத்தில் நார்சிங் போலீசில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம். உண்மையை வெளிக் கொண்டு வர உதவியாக இருக்கும். சத்ரசால் மைதானத்தில் பயிற்சி எடுத்த எந்த வீரராவது இத்தகைய செயலை செய்திருந்தால் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே 300 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர். எனக்கு நார்சிங் குறிப்பிட்டுள்ள அந்த வீரரின் முகம் ஞாபகம் இல்லை'' என பதில் அளித்துள்ளார்.


நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த இளம் வீரர் தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் போட்டியிடும் மல்யுத்த வீரரின் சகோதரர் என்ற தகவலும் இருக்கிறது. தற்போது 17 வயதே நிரம்பிய அந்த வீரர் பிரான்சில் நடைபெறவிருந்த ஜுனியர் அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க கடந்த ஜுன் மாதத்தில் சாய் மையத்தில் பயிற்சியில் இருந்திருக்கிறார். 

ஜுன் 5ம் தேதி சோன்பட் சாய் மையத்தில் வீரர் ஒருவர் மதிய உணவில் எதையோ கலந்ததாகவும் அதனை சமையல்காரர் கையும் களவுமாக பிடித்ததாகவும் பின்னர் அந்த உணவு கொட்டப்பட்டது என்றும் இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பிரிஜ்புஷன் சரண் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்போது சமையல்காரரை வைத்து அந்த வீரரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்  பிடிபட்டதும் நார்சிங் அறைக்கு எப்போதாவது சென்றுள்ளாரா என்பது குறித்து நார்சிங் முன்னிலையில்  விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் அறை சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் சோதிக்கப்படவுள்ளன.
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ள மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், நார்சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் தளத்தில், ''நார்சிங் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  நிச்சயம் அவர் இத்தகைய காரியத்தை செய்திருக்க மாட்டார். முழுமையாக விசாரணை செய்து உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்'' என கூறியுள்ளார். 

இது குறித்து நார்சிங் கூறுகையில், ''நான் மிகச்சிறப்பாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஊக்க மருந்து எடுக்க வேண்டுமென்ற எந்த  அவசியமும் எனக்கு இல்லை. சாய் உணவகத்தில் தண்ணீரில், உணவில் யார் வேண்டுமானாலும் எதையும் கலந்து விட முடியும். இது குறித்து பல முறை மல்யுத்த சங்க நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை . இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்.அதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் உதவ வேண்டும் ''என்கிறார்.
நார்சிங் உடலில் கலந்திருப்பதாகச் சொல்லப்படும் மெத்தாடினினோன் என்ற ஸ்டீராய்ட் இந்தியாவில் பிரபலமானது அல்ல. கடந்த ஜுலை 16 ம் தேதி வரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக  46 வீரர் வீராங்கனைகள் சிக்கியுள்ளனர். அதில் மெத்தாடினினோன் ரன ஸ்டீராய்டை பயன்படுத்தியதாகப் பிடிபடவில்லை. வெளிநாடுகளில் பாடி லிஃப்டர், பவர் லிஃப்டர், வெயிட் லிஃப்டர் ஆகியோரிடையே இந்த ரக ஸ்டீராய்டு வெகு பிரபலம். இந்தியாவைப் பொறுத்தவரை சில ஓட்டப்பந்தய வீரர்கள் மெத்தாடினினோன் பயன்படுத்தி சிக்கியுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு லாஸ்வேகாசில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதால், நார்சிங், கோட்டா அடிப்படையில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றிருந்த சுஷில்குமார், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.


இதையடுத்து நார்சிங் ரியோ ஒலிம்பிக்கிற்காக தீவிரமாகத் தயாராகி வந்தார். தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால் ரியோ ஒலிம்பிக்கில் 74 கிலோ ஃப்ரீஸ்டைல்  பிரிவில் எந்த இந்திய வீரரும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதிவிலக்களித்தால் மட்டுமே மாற்று இந்திய வீரர் பங்கேற்க முடியும். எனினும் நார்சிங்கிற்கு பதிலாக பிரவீன் ரானாவை இந்திய மல்யுத்த சங்கம் மாற்று வீரராக அறிவித்து ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
இந்த சோகத்திற்கிடையே நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜுனியர்  வீரர், சுஷில்குமாரின் மாமனாரும் பயிற்சியாளருமான சத்பால் சிங்கிடம் பயிற்சி பெற்று வருபவர் என்பது  மல்யுத்த வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சினிமாவில்தான் இது போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்தியாவில்  நிஜத்திலும் நிகழ்ந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.




No comments:

Post a Comment