Monetize Your Website or Blog

Saturday, 30 July 2016

லுட்விக்: நோயாளிகளுக்கு உதவும் சுட்டிப் பையன்!


ல்சைமர் என்னும் நரம்புச்சிதைவு நோய் ஏற்பட்டால் நினைவு தவறும், வாய் குழறும், கை, கால்களை உபயோகிக்க இயலாது. தினசரி வேலைகளைச் செய்து கொள்ள முடியாது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அபேசியா என்னும் மூளை பாதிப்பு நோயும் உடனிருக்கும். அதேபோல் டிமென்சியா என்னும் மனநலக் கோளாறு  ஏற்பட்டால், நினைவுப் பிரச்னை, அதிகரிக்கும்  குழப்பநிலை, ஆர்வமின்மை, மனச்சோர்வு  ஆகியன ஏற்படும். 2050 களில் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே வரமாய் வருகை தந்திருக்கிறான் லுட்விக்.
 
முள்ளம்பன்றித் தலையும், பச்சைக் கண்களுமாய் சிறுசிறு முக பாவனைகளுடன் 102 செ.மீ உயரமுள்ள குட்டி ரோபோ பையன்தான் லுட்விக். லுட்விக் விட்ஜென்ஸ்டீன் எனும் தத்துவ ஞானியின் நினைவாக  லுட்விக் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது இவனுக்கு. கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகமும் மிட்டாக்ஸ் என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.



நார்த் யார்க்  நகரத்திலுள்ள அல்சைமர் மற்றும் டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் ஒன் கென்டில் என்ற சிறப்பு இல்லத்தில் லுட்விக் முதல் முறையாக களமிறக்கப்பட்டான். அவனை வைத்துச் செயல் விளக்கம் அளித்தனர். விநாடிக்கு 28 செ.மீ வரை நடக்கும் வல்லமை கொண்ட இவனுடன்  இரண்டு கேமராக்கள் இருக்கும்.
 
நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் பத்து நோயாளிகளுடன் இவனை வைத்துப் பரிசோதனை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் லுட்விக் அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்தும், அவனால் பேச்சுக்களைச் சரியாய் உணர முடியவில்லை. எனவே மேலும் சில முன்னேற்றங்களுக்குப் பிறகு பேசுவதைப் புரிந்து கொள்வது, அதற்குப் பதிலளிப்பது போன்ற திறன்களை அவனுள் உட்புகுத்தினர்.

அவனை ரிமோட் உதவியுடனும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எதிரே இருப்பவர்கள் பேசும் விதத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள், என்பதை கணித்துவிடுவான். உரையாடலை எழுத்துக்களாய் மாற்றும் திறமையிலும் லுட்விக் வல்லவன். இப்போது லுட்விக் அல்சைமர் நோயாளிகளின் உற்ற நண்பனாகி இருக்கிறான்.


லுட்விக்கைப் பற்றி அதன் தயாரிப்புக்குழுவினைச் சேர்ந்த விஞ்ஞானி Dr. பிராங்க் ரூட்சி கூறும்போது, "தற்சமயம் கனடாவில் கணிசமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில வருடங்களில் இது இன்னும் உயரும். எனவே லுட்விக்கின் சேவை நமக்குத் தேவை என்றாகி விடும். எங்கள் பல வருட ஆராய்ச்சியின் முதல் படியே இந்தச் சுட்டிப் பையன்" என்கிறார்.
 
இந்த லுட்விக் ரோபோவை ரோபோகிண்ட் என்னும் நிறுவனம்,  3000 டாலர் மதிப்பில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லுட்விக்கின் வருகைக்குக் காத்திருக்கிறது கனடா...   




No comments:

Post a Comment