காணாமல்போன 16 ஆயிரம் தமிழர்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி இலங்கை அரசுக்கு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு சண்டை நடந்து வந்தது. 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில், 40 ஆயிரத்துக்கும் அதிமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் இலங்கையில், காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச செஞ்சிலுவை சங்கம், நாடு முழுவதும் 14 மாதங்கள் ஆய்வு செய்து அதில், 1989-ம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் பற்றி கணக்கெடுத்தது. அப்போது, குறிப்பாக தமிழர் பகுதிகளில் இருந்து மட்டும் 16 ஆயிரம் பேர் காணாமல் போய் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தவிர, இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 395 குடும்பத்தினரில் 3-ல் ஒரு பங்கு காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், இன்னொரு 3-ல் ஒரு பங்கினர் எங்கோ உயிருடன் இருக்கின்றனர் என நம்புவதாகவும், மீதமுள்ளவர்கள் பற்றி உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்து இருக்கின்றனர். மேலும், மாயமானவர்களின் குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
இது தொடர்பான 34 பக்க அறிக்கையை சமீபத்தில், ஜெனீவா நகரில் உள்ள தலைமையகத்திடம் சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில்தான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதையடுத்து, காணாமல் போன 16 ஆயிரம் தமிழர்கள் கதி என்னவாயிற்று என்பது பற்றியும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இலங்கை அரசு பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவிட்டு உள்ளது.

No comments:
Post a Comment