Monetize Your Website or Blog

Monday, 25 July 2016

'இனி இயற்கை விவசாயம்தான் ஒரேவழி...!' -புதிய பாதையில் சீமான்


யற்கை வேளாண் பொருள் விற்பனையில் கால்பதிக்க இருக்கிறார் சீமான். 'காய்கறிகளோடு நமது பாரம்பர்ய பொருட்களை விற்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சிறப்பு மாநாடு, உணவுக் கண்காட்சி என பரபரப்பாக இயங்குகிறார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சீமான்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்குவது ஒருபுறம் இருந்தாலும், '
நம்மாழ்வார் அய்யாவின் விருப்பப்படி, இயற்கை வேளாண் விற்பனையிலும் நாம் கால்பதிக்க வேண்டும் ' எனப் பேசி வருகிறார் சீமான்.  அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர்.

அவர் நம்மிடம், “ தேர்தல் தோல்விகள் ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. ‘அப்படியே முடங்கிப் போய்க் கிடந்தால், மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள்’ என்று சீமானிடம் சொன்னோம். அதற்காகத்தான், இயற்கை வேளாண்மையை  மக்களுடைய வாழ்வின் ஒருபகுதியாக மாற்றுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மண் சார்ந்த இயற்கைப் பொருட்களை மக்களிடம்  கொண்டு செல்லும்போது, நம்மீதான பார்வை பலமடங்கு அதிகரிக்கும் என நினைக்கிறார் சீமான். ஏற்கெனவே, 'நம்மாழ்வார் இயற்கை இயக்கம்' என்ற பெயரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் பனை பொருட்கள், தென்னை நார் கைவினைப் பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட சமையல் உபகரணங்கள் என பண்டைய கால வாழ்வியல் முறைகளை மீட்டெடுக்க இருக்கிறோம். இதற்காக, எங்கள் கட்சியின் இளைஞர்களிடையே குழுக்கள் அமைத்து, இயற்கை வேளாண் விற்பனையை விரிவுபடுத்த இருக்கிறோம். 



இதற்காக, வருகிற செப்டம்பர் 17-ம் தேதி ஈரோட்டில். இயற்கை வேளாண் மாநாடு ஒன்றை சீமான் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் மிகப் பிரமாண்டமான இயற்கை உணவுக் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. தொண்டர்களிடையே வேளாண் விற்பனையை ஊக்கப்படுத்தும்போது, கீழிருந்து மேலாக கட்சியை பலப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். ‘ சாதி மதமாக பின்னப்பட்டிருந்தாலும் இயற்கை வேளாண் உணவுகள் என்று வரும்போது மனிதர்கள் ஒன்றுபடுகிறார்கள். பாரம்பர்யப் பெருமைகளை மீட்கும் ஒரு பகுதியாகவும் இருக்கும்’ எனத் திட்டமிட்டுள்ளோம். தற்போது மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது? பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களை எப்படி நடத்துவது? கலப்படமில்லாத, இயற்கை வேளாண் முறையில் தயாரான சுத்தமான பொருட்கள் எங்கு கிடைக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார் சீமான். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகர்களில் உணவுக் கண்காட்சியை நடத்துவது, தென்னை, பனையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை திரட்டுவது என கட்சியின் தொண்டர்களும் பரபரப்பாக இயங்குகிறார்கள்” என்றார் விரிவாக. 


விரைவில், ‘ இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் மண்வெட்டி, கடப்பாரையோடு வயல் வெளியில் நாங்கள் இறங்கினாலும் ஆச்சர்யமில்லை’ என்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். 




No comments:

Post a Comment