Monetize Your Website or Blog

Thursday, 28 July 2016

துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'!


பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெஸ்வாடா வில்சன். ' மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு எதிராக சட்டம் கொண்டுவர கடுமையாகப் போராடி வெற்றி கண்டவர் அவர். அவருடைய முயற்சியால்தான் மத்திய அரசு சட்டமே கொண்டு வந்தது. 

இந்தியாவில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் பெஸ்வாடா வில்சனுக்கும் இசைத் துறையில் சிறந்து விளங்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் 2016-ம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது. பெஸ்வாடா வில்சனுக்குக் கிடைத்த விருதை, மனித உரிமை ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த விருதுக்குப் பின்னால், பெஸ்வாடா கடந்த வந்த பாதைகள் அத்தனை வலிகளும், துயரமும் நிறைந்தவை.


கர்நாடகா மாநிலம், கோலார் தங்க வயல் பகுதியில் பிறந்தவர் வில்சன். இவரது பெற்றோர் மனிதக் கழிவை அகற்றும் தொழிலை செய்து வந்தார்கள். இவரது குடும்ப அங்கத்தினர்களும் இதே பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள், 'தோட்டி' என்ற அடைமொழியோடு அவரைக் கிண்டல் செய்தனர். அவரது பெற்றோரிடம், ' என்னால் இப்படியொரு பழிச் சொல்லை ஏற்க முடியவில்லை. வேறு தொழிலுக்கு மாறுங்கள்' எனச் சொல்ல, அவரது பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஒருகட்டத்தில், தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டார் வில்சன். அதன்பிறகு அந்த மன நிலையிலிருந்து  விடுபட்டு ஹைதராபாத், அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டத்தை முடித்தார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்றபோது, இவரது அனுமதியில்லாமலேயே, ' துப்புரவு தொழிலாளி' எனப் பதிவு செய்தார் அதிகாரி. அங்கேதான் போராட்டத்திற்கான விதை தூவப்பட்டது. இந்த இழிநிலையை ஒழிக்க வேண்டும் என சபதமெடுத்தார். பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்கள், துப்புரவு பணிகளுக்குத் திசை திருப்பப்படுவதைக் கண்டு வேதனைப்பட்டார். ' இவர்களுக்கு தொழில்கல்வி கொடுத்து வளர்த்தால், வேறு தொழில்களுக்கு மடைமாற்ற முடியும்' என்பதை அறிந்து கொண்டார். சமூகப் பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தினார். 

'மனிதக் கழிவை மனிதனே அகற்றுவது தேசத்தின் அவமானம்' எனத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக, 1993-ம் ஆண்டு இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான  சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்பிறகு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரின் துணையுடன் தொடங்கப்பட்ட 'சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்' அமைப்பின் நிர்வாகியாகவும் களம் இறங்கினார். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களில் வழக்குப் போட்டு, சட்டத்தை செயல்பட வைத்தார். ' கழிவு அகற்றும் தொழிலில் இருந்து மாற்று பணிகளுக்குத் திரும்பியவர்களின் புனர்வாழ்வுக்காக, மத்திய அரசு அமைத்த கமிட்டியில் பெஸ்வாடாவின் உழைப்பு அளப்பரியது' என்கின்றனர் கர்நாடகா மனித உரிமை ஆர்வலர்கள். 



இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், " பெஸ்வாடா வில்சனுக்கு விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தண்ணீர் வசதியில்லாத கழிப்பிடங்கள் எங்கு இருந்தாலும், அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வைத்தார். மத்திய அரசு கொண்டு வந்த, 'மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கும் சட்டத்திற்கு' அவர்தான் தூண்டுகோலாக இருந்தார். அவர் அனுபவித்த சாதியப் பாகுபாடுகளின் காரணமாக இருபதாவது வயதிலேயே இழிதொழில் ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். கழிவு அகற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து இழிதொழில்களிலுமிருந்தும் தலித்துகள் முற்றாக வெளியேற வேண்டும். அந்தப் போராட்டத்துக்கான உந்துதலை இந்த விருது அவருக்கு வழங்கவேண்டும்" என்றார் நெகிழ்ச்சியோடு. 




No comments:

Post a Comment