Monetize Your Website or Blog

Saturday, 30 July 2016

எம்.பி.ஏ பட்டதாரியை கடத்திய இன்ஜினியரிங் பட்டதாரிகள்!- சினிமாவைப்போல் ஒரு நிஜ சம்பவம்



தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரேம்குமார், சந்திப்சாரி. எம்.பி.ஏ பட்டதாரிகளான இருவரும் கேளம்பாக்கம், பல்லவன் கார்டனில் தங்கி நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 27ம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றனர். வேலை காரணமாக பிரேம்குமார் அலுவலகத்தில் இருந்தார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த சந்திப்சாரி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பிரேம்குமாருக்கு போன் செய்த போது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் சந்திப்சாரி, பிரேம்குமாரை காணவில்லை என்று  தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர், “ பிரேம்குமாரை கடத்தி வைத்திருக்கிறோம். அவர் உயிரோடு வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாயை நாங்கள் சொல்லும் இடத்துக்கு கொண்டு வா. இது தொடர்பாக போலீசுக்கு போனால் பிரேம்குமாரை கொலை செய்து விடுவோம்” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அடுத்து சில நிமிடங்களில் இன்னொரு போன் வந்தது. அதில் பேசியவர், பத்து லட்சம் ரூபாயுடன் கேளம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வரும்படி சொல்லி உள்ளார்.

  
பயந்துபோன சந்திப்சாரி, இந்த தகவலை உடனடியாக போலீஸிடம் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் டீம் மாறுவேடத்தில் அந்த பகுதிக்கு சென்றது. அப்போது பஸ் நிலையத்தில் ஒருவர் போனில் பேசிக் கொண்டு நிற்பதைக் கண்டு, அவர்தான் கடத்தல்காரன் என்று போலீஸார் மடக்கி பிடிக்க, பக்கத்திலிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் அங்கிருந்து நைசாக நழுவி விட்டார். இதன்பிறகு மீண்டும் சந்திப்சாரிக்கு போனில் பேசிய கடத்தல் கும்பலை சேர்ந்தவர், " போலீசுக்கு நீ சென்றதால் உன்னுடைய நண்பரை இனி உயிரோடு பார்க்க முடியாது" என்று சொல்ல, பயந்துபோன சந்திப்சாரி கதறி அழுதவாறே, "தவறு செய்து விட்டேன்... இனிமேல் இதுபோல செய்ய மாட்டேன். நீங்கள் சொல்லும் இடத்துக்கு பணத்தோடு வருகிறேன்" என்று கூறினார்.

இதையடுத்து கடத்தல் கும்பல், சந்திப்சாரியை ஈ.சி.ஆருக்கு வருமாறு கூறியது. இரவு 11.30 மணியளவில் சந்திப்சாரி அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்றார். அங்கு மோட்டார் சைக்களில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவன் மின்னல் வேகத்தில் வந்தான். இதற்குள் போலீஸ் டீம் தங்களுடைய ஆபரேஷனை செயல்படுத்தத் தொடங்கியது. சந்திப்சாரியின் சட்டையை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அணிந்து கொண்டு, அவரே சந்திப்சாரி போல கடத்தல் கும்பலிடம் பேசினார். கையில் கறுப்பு நிற பையைக் கொண்டு சென்றார். அதைப் பெறுவதற்காக பைக்கில் வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவனை, சப் இன்ஸ்பெக்டர் மடக்கிப் பிடித்தார். 

விசாரணையில் அவரது பெயர் பார்த்திபன் என்று தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில்,  பிரேம்குமாரை மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் அடைத்து வைத்திருப்பதாகவும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள், பணத்தைப் பெற ஓ.எம்.ஆர் சாலையில் காருடன் காத்திருப்பதாகவும்  தெரிவித்தார். அடுத்து, போலீஸ் டீம் சம்பவ இடத்துக்கு சென்று கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரவீன் பாலாஜி, விவேக்ராஜ், அரக்கோணத்தை சேர்ந்த ஜெயசீலன் ஆகியோரை கைது செய்து பிரேம்குமாரை மீட்டனர்.


கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார்கள், ஒரு பைக் மற்றும் 4 பட்டா கத்திகள், மயக்க மருந்து ஸ்பிரே, பிளாஸ்டர், நைலான் கயிறு ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். கைதானவர்களில் பிரவீன் பாலாஜி, விவேக்ராஜ் இருவரும் பி.இ பட்டதாரிகள். மேலும் இருவரும் உறவினர்கள். பிரவீன்ராஜ் கம்ப்யூட்டரை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அப்போது இன்ஜினியரிங் படித்த பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்த்திபனின் நண்பர் ஜெயசீலன். இவர்கள் அனைவரும் சேர்ந்து,  'ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவர்களை கடத்தினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்' என்ற ஆசையில் பிரேம்குமாரை கடத்தியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சினிமாவைப் போல நடந்த இந்த காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஆபரேஷன் இரவு 2 மணிக்கு முடிந்தது. 




No comments:

Post a Comment