Monetize Your Website or Blog

Friday, 3 June 2016

ஆக்கிரமிப்பை அகற்றியபோது மோதல்... போலீஸ் எஸ்.பி. உள்பட 14 பேர் பரிதாப பலி!

ஆக்கிரமிப்பை அகற்றியபோது ஏற்பட்ட மோதலில் போலீஸ் எஸ்.பி. உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும், இந்த மோதல் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவகர்பாத் பகுதியில் 260 ஏக்கர் நிலபரப்பு கொண்ட ஒரு பூங்காவை ”சத்தியாக்கிரகிகள்” என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் கடந்த 2 ஆண்டாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர்களை அங்கிருந்து அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், அவர்களை வெறியேற்றுவதில் போலீசார் தோல்வி அடைந்தனர்.


இந்நிலையில், பூங்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை நேற்று போலீசார் வெளியேற்ற மீண்டும் முயற்சி செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. தங்களை அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், காவல் துறையினர் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து, காவலர்களும், போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக்குண்டை வீசியும், தடியடியும் நடத்தி இருக்கின்றனர்.

அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் ‌துப்பாக்கியால் போலீசாரை சுட்டுள்ளனர். இந்த மோதலில், மாவட்ட கண்காணிப்பாளர் முகுல் திவிவேதி மற்றும் காவலர் சந்தோஷ் குமார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச மாநில போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தால்ஜித் சிங் சவுத்ரி செய்தியாளரிடம் கூறும்போது, ''அலகாபாத் நீதிமன்ற உத்தரவுபடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட கண்காணிப்பாளர் முகுல் திவிவேதி தலைமையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மீது ஆக்கிரமிப்பாளர்கள் கற்களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் இருக்கின்றனர். இதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார், கண்ணீர் புகைக்குண்டை வீசியும் தடியடியும் நடத்தி இருக்கின்றனர்.

இந்த மோதலில் 2 போலீசார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்து உள்ளனர். போலீசாரை தாக்கிய மற்றும் துப்பாக்கியால் சுட்ட ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கமிஷனரிடம் இருந்து அறிக்கை வரவேண்டிய உள்ளது. அது வந்ததும், அதன்படி விசாரணை தொடரும். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறது" என்றார்.

இதனிடையே, இந்த மோதல் சம்பவத்திற்கு வேதனையை தெரிவித்துள்ள மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், உயிரிழந்த இரண்டு போலீசார் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருமாறு மாநில போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டு உள்ளார்.



No comments:

Post a Comment