Monetize Your Website or Blog

Thursday, 21 July 2016

'நாடாளுமன்றத்தில் ராகுல் தூங்கவில்லை... கீழே பார்த்துக் கொண்டிருந்தார்!' - காங்கிரஸ்


 நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தூங்கவில்லை. அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் அவர் கீழே பார்த்துக் கொண்டிருந்தார் என்று காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி விளக்கம் அளித்து உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, நாடாளுமனத்தின் இரு அவைகளிலும் நேற்று, காரசாரமான விவாதம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த சம்பவத்துக்காக மத்திய அரசை கண்டித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் மோதலால் பெரும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து இதற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றியபோது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி உடனடியாக இதற்கு விளக்கம் அளித்தார்.


அப்போது அவர், ''விவாதம் நடந்தபோது ராகுல்காந்தி தூங்கவில்லை. உள்துறை அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால், அவர் கீழே பார்த்துக் கொண்டிருந்தார். அவையில் பெரும் அமளி நடந்து கொண்டிருக்கும்போது ஒருவரால் எப்படி தூங்க முடியும். ராகுல்காந்தி அவையில் தூங்கவில்லை. பேசுவதற்கு எத்தனையோ பெரிய விஷயங்கள் இருக்கும்போது, இது முக்கியமான விஷயமா’’ என  கேள்வி எழுப்பினார்.

இதுபற்றி மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கருத்து தெரிவிக்கையில், "ராகுல் காந்தி தூங்கியது, காங்கிரசின் மனநிலை எத்தகையது என்பதை காட்டுகிறது. அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையிலும் உண்மையான அக்கறை கிடையாது. காரணம் இல்லாமல் கூச்சல் போட்டு நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றனர். காங்கிரஸ் மூழ்கும் கப்பல். அதனால்தான் அவர்களின் தலைவர் தூங்குகிறார். ஆனால் காங்கிரஸ் இதை மறுக்கிறது. அவர்கள் அனைத்தையும் அரசியல் ஆக்குகின்றனர்" என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறும்போது, ''தலித் மக்கள் குறித்த விவாதத்தின்போது அவையில் ராகுல்காந்தி தூங்குகிறார். இந்த பிரச்னையில் காங்கிரஸ் எந்த அளவிற்கு அக்கறை கொண்டு உள்ளது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது“ என்றார்.




No comments:

Post a Comment