மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்படவுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக தற்போது இணையமைச்சராக உள்ள முக்தர் அப்பாஸ் நக்வி கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பின், கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமோ விஸ்தரிப்போ செய்யப்படவில்லை.இந்நிலையில் நாளை மந்திரிசபையை மாற்றியமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மந்திரி சபை மாற்றம் குறித்து கடந்த ஒரு வார காலமாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமீத் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி விவாதித்து வந்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சகங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சர்பானந்தா சோனாவால், தற்போது அசாம் மாநில முதல்வராக பதவியேற்று விட்டதால், அவரது இடத்தில் மற்றொரு வடகிழக்கு மாநிலத்தவரையே நியமிக்க மோடி திட்டமிட்டுள்ளார். அனேகமாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராமன் தேகா, விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உத்தரபிரதேச மாநிலத்துக்கு மேலும் 2 அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment