Monetize Your Website or Blog

Saturday, 4 June 2016

திமுக எதிரிக்கட்சியாக செயல்படாது..! சபாநாயகரை வாழ்த்தி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிரிக்கட்சியாக செயல்படாது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

   


தமிழக சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசுகையில், தமிழக சட்டசபை பேரவைத் தலைவரை தேர்ந்தெடுத்த பிறகு அவரை அவரது இருக்கையில் அமர  வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வாழ்த்துகிறேன். இந்திய நாட்டின் வரலாற்று பெருமை மிக்க சபையாக தமிழக சட்டசபை உள்ளது. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கம் 1920-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. அன்று தொடங்கி இன்று வரை முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பை இந்த மாமன்றம் சிறப்பாக செய்து வருகிறது. 1952ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த சட்டசபையில் ஜெ.சிவசண்முகம் பிள்ளை மிகப்பெரிய அஸ்திவாரத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்.

 


பேரறிஞர் அண்ணா தலைமையின் கீழ் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அப்போது சட்ட பேரவை தலைவராக யூ.கிருஷ்ணாராவ், பிறகு திறமை வாய்ந்த தலைவர்களாக புலவர் கோவிந்தன், முனுஆதி, சி.பா.ஆதித்தனார், செல்லப்பாண்டியன், காளிமுத்து, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போன்ற எண்ணற்ற பண்பாளர்களை மறந்துவிட முடியாது. அவர்கள் ஆற்றிய பணி அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. ஜனநாயகத்தின் முக்கிய மூன்று தூண்களில் சட்டமன்றமும் ஒன்று. என்னை விட மூத்த உறுப்பினர்கள் இந்த சட்டசபை மாண்பை நன்கு அறிந்திருப்பார்கள். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பேரவைத் தலைவர் என்பவர் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவராக இருத்தல் வேண்டும். இதை சட்ட மன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்ப்பது இயல்பு. தமிழக சட்டசபையில் இதுவரை இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக தி.மு.க. அமர்ந்துள்ளது. இந்த அவையில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிரிக்கட்சியாக செயல் படாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



தமிழ்நாட்டின் நலன்களை காப்பதிலும் இந்த அவையின் நலன்களை காப்பதிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் பொறுப்பு உண்டு. ஒரு சிறந்த எதிர்க்கட்சியை உருவாக்கும் பொறுப்பு ஆளும் கட்சிக்குத்தான் இருந்திட வேண்டும். நாங்கள் இந்த பேரவைத் தலைவர் மீதும் துணைத் தலைவர் மீதும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளோம்.  அவருக்கு எங்கள் சார்பிலும், தி.மு.க. தலைவர் கலைஞர் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பேசினார்.


ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.




No comments:

Post a Comment