Monetize Your Website or Blog

Monday, 4 July 2016

500 டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலி... மது விற்பனை 5 சதவீதம் குறைந்தது!

500 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் மது விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், அரசுக்கு தினமும் ரூ.3 கோடியே 28 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன. மது விற்பனை மூலம் அரசுக்கு தினமும் ரூ.60 கோடி வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், “நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.

அதன்படி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற அன்று, 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைப்பது மற்றும் 500 மதுக்கடைகளை மூடுவது என்பதாகும்.

அதன் அடிப்படையில், காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த மதுக்கடைகள், 24-5-2016 முதல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று விற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டு இயங்கி வருகிறது.


இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 19-6-2016 அன்று 500 மதுக்கடைகளும் மூடப்பட்டது. அதாவது, சென்னை மண்டலத்தில் 58 மதுக்கடைகளும், கோவை மண்டலத்தில் 60 மதுக்கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 மதுக்கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 மதுக்கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மண்டலம் வாரியாக அவர்களின் முதுநிலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், முதுநிலைப் பட்டியல் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இதில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரம் மற்றும் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், தற்போது மது விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு ரூ.60 கோடி என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது ரூ.56 கோடியே 72 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இதை மண்டல அளவில் கணக்கிடும்போது, சென்னை மண்டலத்தில் ரூ.65 லட்சமும், கோவை மண்டலத்தில் ரூ.60 லட்சமும், சேலம் மண்டலத்தில் ரூ.38 லட்சமும், திருச்சி மண்டலத்தில் ரூ.67 லட்சமும், மதுரை மண்டலத்தில் ரூ.98 லட்சமும் என மொத்தம் ரூ.3 கோடியே 28 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment