Monetize Your Website or Blog

Thursday, 21 July 2016

இங்கு என்ன ஆலோசனைக் கூட்டமா நடக்கிறது?' -பட்ஜெட் கூட்டத்தில் கொந்தளித்த ஓ.பி.எஸ்



சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை வியாழக்கிழமை தொடங்க இருக்கிறது. ' 2016-17 ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. நாளை வெளியாக உள்ள பட்ஜெட்டில் இதுகுறித்து ஓ.பி.எஸ் அறிவிப்பார்' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 







தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், பட்ஜெட் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், காரசாரமாக பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வணிகர்கள், " மதிப்புக் கூட்டு வரியை வணிக வரி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கட்டுகிறோம். இதைத் தடுப்பதற்காக இ-ஃபைலிங் சாப்ட்வேரை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது என்னவென்றே எங்களுக்குத் தெரியவில்லை. இந்த சாப்ட்வேரை பெரிய நிறுவனங்கள் வாங்கிவிட்டனர். அவர்கள் கணினி மூலமாகவே வரியைக் கட்டுகின்றனர். சிறு வணிகர்களான எங்களால் வாங்க முடியவில்லை. வரி கட்டுவதற்கு ஒருநாள் தாமதம் ஆனாலும் அபராதம் போட்டுவிடுகின்றனர். விரைவில் மத்திய அரசு, ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்த இருக்கிறது. அதற்கென தனியாக சாப்ட்வேர் அறிமுகப்படுத்த உள்ளனர். இ-ஃபைலிங் முறையை எளிமைப்படுத்தியும் அபராதத்தில் இருந்தும் எங்களுக்கு விலக்கும் அளிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்துப் பேசிய ஓட்டல் உரிமையாளர் ஒருவர், " நுகர்வோர்கள் உணவுப் பொருட்களை வாங்கும்போது 14.5 சதவீத வாட் வரியைக் கட்டுகின்றனர். உணவுப் பொருட்களில் சிலவற்றுக்கு மட்டும் 5 சதவீத அளவுக்கு வாட் வரியை மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும்" எனச் சொல்ல, இன்னொரு வணிகரோ, " கட்டுமானத் துறையில் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை. பைப் உள்பட பல பொருட்களுக்கு பில் போடும்போது, ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக வாட் போட வேண்டியுள்ளது. இரண்டு வகையான வரியைக் கட்டும்போது நுகர்வோர்கள் எரிச்சல் அடைகின்றனர். எங்களை சந்தேகத்தோடு பார்க்கின்றனர். ஒரு பில்லுக்கு ஒரே வாட் வரியைக் கொண்டு வர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.


இதேபோல், ஆடை ஏற்றுமதியாளர்களும் தங்களுடைய கோரிக்கைகளைப் பற்றி விளக்கிக் கொண்டே போக, எரிச்சலான ஓ.பன்னீர்செல்வம், " பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்களைக் கொண்டு வரலாம் என்பதற்காகத்தான் உங்களையெல்லாம் அழைத்தோம். இது ஒன்றும் ஆலோசனைக் கூட்டம் அல்ல. மக்களுக்கு பலன் தரக் கூடிய விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். உங்களுக்கு ஏதாவது கோரிக்கைகள் இருந்தால், மனுவாக எழுதிக் கொடுங்கள். முதல்வரிடம் சென்று சேர்க்கிறேன்" எனக் கொந்தளிக்க, கூட்டம் அப்படியே அடங்கிப் போனது. 

இதையடுத்து, இரவு 8.30 மணி வரையில் பட்ஜெட் தொடர்பான கருத்துக்களைக் கேட்டுவிட்டுக் கிளம்பினார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 




No comments:

Post a Comment